×

பசுமைப் போராளி…வான்காரி மாத்தாய்

நன்றி குங்குமம் தோழி

“நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணி வான்காரி மாத்தாய் பிறந்த மாதம் இது.” சமூகத்தின் துயரங்களை காலம்தான் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, பிறந்த மண்ணுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி தன் வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்தவர். கென்யாவில் இகிதி என்ற கிராமத்தில் 1940ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி, மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர் வான்காரி மாத்தாய்.

அவருடைய காலத்தில் பெண்கள் யாரும் படித்திருக்கவில்லை. பெண்கள் தொடவே முடியாத உயரத்தில் கல்வி இருந்தது. தனது சகோதரரின் தூண்டுதலில் படிப்பை தொடர்ந்த வான்காரி மாத்தாய், அன்றைய அமெரிக்க அதிபராய் இருந்த கென்னடி அரசு வழங்கிய உதவித்தொகையில் பிட்டஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் உயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்த புரிதல் இல்லாமலே அமெரிக்கா சென்றவர், அங்கு மார்ட்டின் லூதர்கிங் ஏற்படுத்திய கிளர்ச்சியால் தூண்டப்பட்டு, படிப்பு முடிந்ததும் ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற உணர்வில் கென்யா திரும்பினார். காலனி ஆதிக்கத்தில் வேறூன்றி, அடிமைகளாய் வாழும் சமூகத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாகவே இருக்க, பல போராட்டங்களைக் கடந்து, ஜெர்மனியின் நைரோபி பல்கலைக்கழகத்தில் கால்நடைத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

அத்துடன் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணி என்கிற பெருமையை தனதாக்கிக் கொண்டார். தொடர்ந்து நைரோபி பல்கலைக்கழகத்தின் கால்நடைத் துறையில் முதல் பெண் தலைவராகவும், இணை பேராசிரியராகவும் பணியாற்றினார். அந்தப் பகுதியில் இவ்விரு பதவிகளையும் பெற்ற முதல் பெண் வான்காரி மாத்தாய் ஒருவரே. இந்த நிலையில் இவரின் வளர்ச்சி ஆண்களிடம் வெறுப்பைத் தூண்டியது.

அமெரிக்காவில் தான் பார்த்த போராட்டங்களால் ஈர்க்கப்பட்டவர், தனது கல்லூரி வேலையைத் துறந்து ஏழை மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலில் ‘பசுமை பட்டை’ என்கின்ற சுற்றுச்சூழலைக் காக்கும் இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கம் மூலமாக மரங்களை நடுவதற்கான பணியைத் தொடர்ந்தார். உலகைச் சமநிலைப்படுத்துகிற இயற்கையைப் பாதுகாக்கவும், ஆப்பிரிக்க வனவளத்தைக் காக்கவும் தனது பணிகளை வரையறுத்துக்கொண்டார். முப்பது ஆண்டுகளில்
3 கோடி மரங்கள் எனும் வியக்க வைக்கும் இலக்கைத் தான் தொடங்கிய இயக்கத்தின் குறிக்கோளாக்கினார். பெண்கள் குழுக்களின் உதவியுடன் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட மரங்களை காடுகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தேவாலய வளாகங்களில் நட்டு வைத்தார்.

அப்போது ஆப்பிரிக்காவில் ஆண்கள்தான் பெருமளவில் நிலத்திற்கு சொந்தக்காரர்களாக இருந்தார்கள். பெண்கள் நிலத்தில் வேலை மட்டுமே செய்து வந்தனர். அன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கென்று எந்த உரிமையும் இல்லை. நிலங்களில் வேலை மட்டுமே செய்து வந்த பெண்களுக்கு, மரங்களை வளர்க்கத் தெரியவில்லை என்றே சொல்லலாம். பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மரம் நடுவதற்கான பயிற்சியை பெண்களுக்கு வழங்கி வந்தவர், காடுகளில் வளர்க்கப்பட்டு வந்த பணப்பயிர்களை எதிர்த்து போராடி, பெண்களை பாரம்பரிய பயிர்களை வளர்க்கத் தூண்டினார். அதன் மூலம் அவர்களே சத்தான உணவை உற்பத்தி செய்யவும் பழக்கப்படுத்தினார்.

பெண்களுக்காகவும், அவர்களுடைய உரிமைகளுக்காகவும் போராடிய வான்காரி மாத்தாய் கிராமப்புற பெண்களுக்கு மரம் வளர்ப்பதற்காகவும், அதை பராமரிப்பதற்காகவும் சிறியளவில் ஊக்கத்தொகையும் வழங்கினார். இதன்மூலம், ஆண்களும், பெண்களுடன் சேர்ந்து மரங்கள் நடுவது, பெண்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு கல்விக்கான முக்கியத்துவத்தை கொடுப்பது போன்ற செயல்களில் இறங்கினர்.

சிறிய கிராமத்தில் தொடங்கிய வான்காரி மாத்தாயின் பணி, கென்யாவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. தான்சான்யா, உகாண்டா, மலாவி, லெசோதோ, எத்தியோப்பியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட பல நாடுகளும் இது போன்ற மரம் நடும் திட்டங்களை தொடங்கினர். அப்போது பலருக்கும் பிடித்தமான நைரோபில் நகரில் இருந்த ஒரேயொரு பூங்காவை அழித்து பல
மாடிக் கட்டிடம் கட்ட கென்ய அரசு திட்டமிட்டது. இந்தச் செய்தி வான்காரி மாத்தாயின் செவிகளை எட்டியதுமே, அதைத் தடுக்க கடுமையான போராட்டத்தை அரசுக்கு எதிராக மேற்கொண்டார். போராட்டத்தை அரசு பல்வேறு விதங்களிலும் முடக்கப் பார்த்தது.

ஆனாலும் வெற்றி வான்காரி மாத்தாய்க்கே. திட்டத்தைச் செயல்படுத்தாமலே அரசு பின் வாங்கியது. சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் கல்வி சார்ந்த விழிப்புணர்வுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட வான்காரி மாத்தாய் தொடர்ந்து பெண்களுக்கான தேசிய கவுன்சிலிங் தலைவியானார். இதனால் தனது கோரிக்கைகளை நாடு முழுவதும் கொண்டு செல்லத் தொடங்கினார். அடுத்து ஐ.நாவில் பெண்களுக்கான வளர்ச்சி திட்டத்திலும் இணைந்தார். சிலமாதங்களிலேயே அவரின் பணி அடுத்த நிலைக்கு நகர்த்தப்பட்டது.

ஆப்பிரிக்காவில் காலனிய ஆதிக்கத்தால், மனித உரிமை மற்றும் ஜனநாயகம் என்ன என்று தெரியாது இருந்த மக்களை, குறிப்பாக ஏழை மக்களை, வழிநடத்தும் தலைவரானார். அரசியலிலும் பங்கெடுத்தார், அரசின் சர்வாதிகாரத்தால் பலமுறை தேர்தலில் தோற்றவர், 2002-ல் முறையான ஜனநாயக தேர்தல் கென்யாவில் நடைபெற்றபோது, அதிக வாக்குகளைப் பெற்று சுற்றுச்சூழல் இணை அமைச்சரானார்.

“மாற்றத்திற்கான பெண்கள்” என்ற அமைப்பைத் தொடங்கி பெண்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர், ஆண்களின் அடிமைகளாக கருதப்பட்ட பெண்களை பாதுகாக்கும் விதமாகச் சட்டங்களையும் உருவாக்கினார். இளம் பெண்களுக்கு கல்வி மூலம் தன்னம்பிக்கையும், முடிவெடுப்பதில் தங்களுக்கும் பங்குண்டு என்ற உணர்வையும் ஏற்படுத்தினார்.

உலகமே வியந்து பார்க்கும் அமைதிக்கான நோபல் பரிசினை 2004-ல் வான்காரி மாத்தாய் பெற்றார். சூழலியல் பாதுகாப்பு மூலம் அமைதி, வளர்ச்சி மற்றும் ஜனநாயகம் போன்றவற்றை ஏற்படுத்தியதால் இவ்விருதை வழங்குவதாக நோபல் பரிசுக்கான தேர்வாளர்கள் குழு விளக்கியது.ஏப்ரல் மாத வெயிலின் உக்கிரம் சுட்டெரித்துக் கொண்டிருக்க… நிழலின் அருமையினை மரங்கள்தான் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

“மரங்களை நடும்போதே நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்கிறோம்” என்ற வான்காரி மாத்தாய், ஏப்ரல் மாதத்தில் பிறந்து வாழ்நாள் முழுவதையும் மரங்களை நடவும், சுற்றுச்சூழலை நேசிப்பதற்காகவுமே அர்ப்பணித்து, 2011 செப்டம்பர் 25ல் தான் நேசித்த இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.

“மரங்களை நடும்போதே நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்கிறோம்!”
– வான்காரி மாத்தாய்

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post பசுமைப் போராளி…வான்காரி மாத்தாய் appeared first on Dinakaran.

Tags : Mathai ,Wangari Maathai ,Vankari Mathai ,
× RELATED வனிதா மதில் சபரிமலையின் 19ம் படி